நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தூரம் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட யானையொன்று பங்களாதேஷில் மீட்கப்பட்டுள்ளது.
முழுமையாக வளர்ந்த மேற்படி யானை இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து பங்களாதேஷுக்குள் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷின் ஜமால்பூர் மாவட்டத்திலுள்ள கிராமமொன்றின் குளமொன்றில் மேற்படி யானை தவிப்பதை கிராமவாசிகள் கண்டனர். இந்த யானை நீரில் மூழ்கி இறக்கும் அபாயமிருந்த நிலையில் இது தொடர்பாக வனவிலங்குத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதையடுத்து, மேற்படி யானைக்கு நேற்றுமுன்தினம் மயக்க மருந்து ஏற்றப்பட்டு, வனவிலங்குத் துறையினரும் கிராமவாசிகளும் இணைந்து யானையை மேற்படி குளத்திலிருந்து வெளியே எடுத்தனர்.
இந்த யானை இந்தியாவில் தனது யானைக் கூட்டத்திலிருந்து வெள்ளத்தால் பிரிக்கப்பட்டு சுமார் 1000 கிலோமீற்றர் தூரம் இடம் பெயர்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த யானையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவருவது குறித்து இந்திய அதிகாரிகள் முதலில் ஆராய்ந்தனர். எனினும், இந்த யானையை அதன் யானைக்கூட்டம் மீண்டும் ஏற்காமல் விடலாம் என்பதால் இத்திட்டத்தை இந்திய அதிகாரிகள் கைவிட்டனர்.
அதையடுத்து, பங்களாதேஷின் டாக்காவுக்கு அருகிலுள்ள வனவிலங்குப் பூங்காவொன்றுக்கு இந்த யானையை வாகனம் மூலம் கொண்டு செல் வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.








