தங்கையின் கணவன் மீது ஏற்பட்ட மோகத்தால் மனைவியொருவர் கணவனைக் கொலை செய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகேயுள்ள கல்மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவருக்கு முதல் மனைவி மூலம் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி இறந்துவிட்டார்.
இந்நிலையில் ராமகனியை(36) தங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையிலேயே, ராமகனி தனது தங்கையின் கணவனோடு உல்லாச வாழ்க்கை நடத்த ஆசைப்பட்டு கணவனை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, மனைவி ராமகனி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து ராமகனி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, எனது கணவருக்கும், எனக்கும் அதிக வயது வித்தியாசம் இருந்தது. ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு எனது தங்கை உத்திரகனியின் கணவர் அன்பழகனும், நானும் தனியாக சந்தித்து பேசினோம். அப்போது முதல் எங்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டது.
லொறி சாரதியாக இருந்த அவர் அடிக்கடி வெளியூரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு என்னுடன் வந்து உல்லாசமாக இருப்பார்.
நானும், தங்கை வீட்டுக்கு செல்வதாக எனது கணவரிடம் கூறி விட்டு சென்று விடுவேன். நாங்கள் இருவரும் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, வெளியூரில் வேலைக்குச் சென்றிருப்பதாக தங்கை யிடம் கூறிவிட்டு அன்பழகன், எங்கள் தோட்டத்தில் வந்து தங்கினார். பக்கத்தில் லொறி ஓட்டி வருவதாக எனது கணவரையும் கூறி நம்ப வைத்து அவர் எங்களுடன் இருந்தார்.
ஒருவாரம் அவர் எங்களுடன் தங்கியிருந்தார். அப்போது அன்பழகனும், நானும் பலமுறை உல்லாசமாக இருந்தோம். இது எனது கணவருக்கு தெரியவரவே, அன்பழகனைக் கண்டித்து அனுப்பிவிட்டார். என்னையும் கண்டித்தார்.
இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. என்னால் அன்பழகனை பிரிந்திருக்க முடியவில்லை. இதையடுத்து தங்கராஜை கொலை செய்யத் திட்டமிட்டோம்.
எங்களது கொலைத் திட்டத்துக்கு தூத்துக்குடியிலுமுள்ள எனது அக்காவின் மகன் ராமுவையும்(22) துணைக்கு அழைத்து, கணவர் என்னை கொடுமைப்படுத்துவதாக ராமுவிடம் கூறினேன்.
சம்பவம் நடந்தபோது, அன்பழகனுக்கு போன் செய்து, வெளியே படுத்திருந்த எனது கணவரை கொலை செய்யுமாறு கூறினேன். இதனையடுத்து அவர் கொலை செய்தார்.
இதைத்தொடர்ந்து, தலைமறை வாகியிருந்த கள்ளக் காதலன் அன்பழகன், ராமு ஆகிய 2 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.






