விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான ரம்யா மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ரம்யா சமீபத்தில் கன்னட டிவிக்கு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தரங்கில் கலந்துக்கொண்ட பொழுது பாகிஸ்தானியர்கள் நன்றாகவே எங்களுடன் பழகினர்.
பாகிஸ்தானுக்கு செல்வது நரகம் செல்வதற்கு ஒப்பானது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போல அந்நாடு இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரம்யாவின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கர்நாடக பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத், ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும், ரம்யா மீது தேசவிரோத வழக்கும் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மங்களூர் அருகே ரம்யா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ரம்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், முட்டை வீசப்பட்டதாக பொலிசார் தன்னிடம் தெரிவித்தனர். ஆனால் தனக்கு இது பற்றி தெரியவில்லை என்று கூறியுள்ளார்.






