உயர்தரப் பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் இரகசியப் பொலிஸார் விசாரணை!!

460

GCE AL

நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சைகளில் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் இரகசியப் பொலிஸாரிடம் விசாரணைகள் முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.

வேறு மாவட்ட மாணவர்களை மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் பரீட்சை எழுத அனுமதித்த போது இலஞ்சம் பெறப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதால் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த முறைகேடுகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும்,இது தொடர்பில் இதுவரை இரண்டு பாடசாலை அதிபர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் நாளைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.