என்னையும், எனது காதலையும் மதிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மாணவி சோனாலியை அடித்துக்கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள கொலையாளி உதயகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
கரூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு சிவில் பாடம் படித்து வருகிறார் சோனாலி. இவர் வழக்கம்போல் நேற்று வகுப்பறைக்கு சென்று அங்கு அமர்ந்துள்ளார்.
அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த உதயகுமார் என்ற மாணவன், கட்டையால் சோனாலியை தாக்கியுள்ளார். இதில், வலி தாங்க முடியாத சோனாலி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதனைத்தொடர்ந்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், அதன் பின்னர் மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சோனாலி உயிரிழந்தார். மாணவியை தாக்கிய உதயகுமார் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர் ஆவார்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் கல்லூரிக்குள் புகுந்த இவர் இந்த வெறிச்செயலை நிகழ்த்தியுள்ளார்.
பின்னர் கல்லூரி அருகே உள்ள மண்மங்கலத்தில் பதுங்கி இருந்த உதயகுமாரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். உதயகுமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
அவரிடம் கரூர் டவுன் பொலிஸ் நிலையத்தில் வைத்து நேற்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை கொன்றது தொடர்பாக உதயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளான்.
“சோனாலி அமைதியாகவும், அழகாகவும் இருப்பார். இதனால் அவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தேன். சோனாலி என்னிடமும் போனில் பேசி வந்தார்.
இதற்கிடையில் என்னை நடத்தை சரியில்லை என்று கல்லூரி நிர்வாகம் நீக்கியதால் என்னிடம் பேசுவதை சோனாலி தவிர்த்து விட்டார்.
நான் அவரிடம் பேசுவதற்கு எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை. என்னையும், எனது காதலையும் மதிக்கவில்லையே என்று வேதனைப்பட்டேன். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் ஒரு முடிவுடன் கல்லூரிக்கு வந்தேன். அவர் இருக்கும் வகுப்பறைக்குள் ஆத்திரத்துடன் நுழைந்தேன். இருவருக்கும் இடையே அப்போது தகராறு ஏற்பட்டது.
அடக்க முடியாத ஆத்திரத்தில் வகுப்பறையில் இருந்த கட்டையை எடுத்து அவள் தலை மீது தாக்கினேன். என்னை தடுக்க வந்தவர்களையும் தாக்க முயன்றேன். இதனால் அவர்கள் பயந்து ஓடிவிட்டனர்.
இதன் பின்னர் நான் தப்பிவிட்டேன் என்று கூறியுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.






