பசியால் தவிக்கும் என்னை அனாதை இல்லத்தில் சேருங்கள் : ரயில் நிலையத்தில் கதறிய பெண்!!

766

lady

வயதான பெண் ஒருவர் கவனிக்க யாரும் இல்லாததால் பசியால் தவிக்கும் என்னை அனாதை இல்லத்தில் சேருங்கள் என்று ஈரோடு ரெயில்வே பொலிசாரிடம் கதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு ரெயில் நிலையத்தில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அங்குள்ள 3-வது பிளாட் பாரத்தில் படுத்து இருந்த வயதான ஒரு பெண் அழுதபடி இருந்துள்ளார். அந்த வழியாக இவரை கடந்து சென்ற யாருமே கண்டு கொள்ளவில்லை.

அப்போது அந்த வழியாக ரெயில்வே பொலிசார் ரோந்து சென்றுள்ளனர். அவர்கள் பிளாட்பாரத்தில் அழுதபடி படுத்திருந்த அந்த மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது அவர் ‘தன்னை கவனிக்க யாருமே இல்லை என்றும். தாம் அனாதையாகி விட்டதாகவும், இந்த வயதான காலத்தில் தினமும் பசியால் துடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எவரேனும் தன்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேருங்கள். அங்கு சென்றாலாவது தனக்கு வயிறார சாப்பாடு கிடைக்கும்’ என்று அழுதபடியே கூறியுள்ளார்.

அந்த மூதாட்டியின் பேச்சில் பரிதாபப்பட்ட பொலிசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரிடம் மேலும் விசாரித்துள்ளனர்.

அப்போது அவர், தனது பெயர் பவானி (70) எனவும், சிதம்பரம் கவரப் பேட்டையை சேர்ந்த சம்பந்தம் என்பரின் மனைவி எனவும் தெரிவித்துள்ளார்.

தமக்கு குழந்தைகள் இல்லை என்பதால் தனது கணவர் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார் எனவும், தற்போது கணவர் இறந்த நிலையில் 2-வது மனைவியின் மகன்கள் தன்னை கவனிக்க வில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் அந்த மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளனர். முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.