
பல பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவன் சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன் ஜெய்சங்கர் (36). இவன் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன். கர்நாடக பொலிசார் அவனை கைது செய்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்து இருந்தனர்.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் சிறையில் ஜெய்சங்கர் தப்பி ஓடிவிட்டான். ஜெய்சங்கர் பொலிஸ் சீருடையில் தப்பியதாக கூறப்படுகிறது. அப்படி சென்றதை பார்த்த ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.
அத்துடன் சுவரில் உள்ள மின்சார வேலியில் எதிர்பாராதவிதமாக மின்சாரத்தடை ஏற்பட்டாலும் அடுத்த சில வினாடிகளில் மின்சாரம் வந்துவிடும். ஆனால், ஜெய்சங்கர் தப்பிச்சென்ற அன்று யாரோ ஒருவர் மின் வினியோக பிரதான சுவிட்சை நிச்சயம் ஓப் செய்திருக்க வேண்டும் என்றும் அது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் தலா 200 வீதம் மாமூல் வசூலிப்பது வாடிக்கை.
வசூலாகும் பணத்தை சனிக்கிழமை அன்று மாலையில் பங்கு பிரித்துக்கொள்வது வழக்கம். ஜெய்சங்கர் தப்பிச்சென்ற அன்று அதிகாரி ஒருவர் ஓய்வு பெற்றதையொட்டி மதுவிருந்தும் நடைபெற்று இருக்கிறது.
இந்தநிலையில் ஜெய்சங்கர் தப்பிச்சென்ற விவகாரத்தில் பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அந்த சிறையில் அதிகாரி ஒருவரின் மனைவி அவருடைய கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த அதிகாரிதான் தனது மனைவியையும் கள்ளக்காதலனையும் தீர்த்துக்கட்ட இதுபோன்ற குற்றங்களில் கைதேர்ந்தவனான ஜெய்சங்கரை பயன்படுத்த திட்டமிட்டு அவன் தப்பிச்செல்ல உதவி இருக்கலாமா என்ற சந்தேகமும் பொலிசாருக்கு எழுந்துள்ளது.
கர்நாடக மாநில பொலிஸ் ஐ.ஜி.லால் லோகுமா பச்சாவுவிடம் இதுபோன்ற சந்தேகங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர் தற்போதைய நிலையில் அது குறித்து எதுவும் கூற முடியாது. உள்துறை அமைச்சர், பொலிஸ் ஆணயைளார் ஆகியோருடன் சிறையில் ஆய்வு நடத்தியபோது சிறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியதாக தெரிவித்தார்.





