தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம் குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு வடக்கை முழுமையாக அபிவிருத்தி செய்து கொள்ளமுடியும்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துரைத்த அவர் அரசாங்கம் இந்த விடயத்தில் மாற்றுச் சிந்தனையை கொண்டிருக்கிறது என்று கூறினார்.
இந்த இணைப்பு என்பது வடக்கு கிழக்கு மக்களின் விருப்பத்தை பொறுத்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கூட்டமைப்பு கோரி நின்றாலும் அது தொடர்பில் ஜனாதிபதியே இறுதிமுடிவை எடுக்கமுடியும் என்று வாசுதேவ சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிகள் பல்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அமைக்கப்படவுள்ள வடக்கு மாகாணசபையில் இணைந்து செயற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.





