வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் 107 பேர் சமூகத்துடன் நேற்று திங்கட்கிழமை இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலிருந்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய புனர்வாழ்வு பெற்ற 107 முன்னாள் போராளிகளே சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் 101 முன்னாள் ஆண் போராளிகளும் 06 பெண் போராளிகளும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய வெலிகந்தை மற்றும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வந்தவர்கள் ஆவர்.
வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 75 பேரும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 32 பேரும் புனர்வாழ்வு பெற்ற நிலையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் 11 ஆயிரத்து 651 பேர் இதுவரையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 339 பேர் இன்னும் புனர்வாழ்வு பெற்றுவருகின்றனர் என்று சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஜி.ஏ.வித்தானகே தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மனிதவள அபிவிருத்தி சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர, வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, வவுனியா வைத்தியசாலை அத்தியசட்சகர் சத்தியமூர்த்தி, புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






