ரஜினியின் கோச்சடையான் அனிமேஷன் படம் மெகா பட்ஜெட்டில் தயா ராகியுள்ளது. ஹொலிவுட் படங்களான அவதார் ,டின்டின் போன்று இப்படத்தை எடுத்துள்ளனர். இதன் டிரெய்லர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீசானது.
காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிட்டனர். 12 மணி நேரத்தில் 4 லட்சம் ரசிகர்கள் கோச்சடையான் டிரெய்லரை பார்த்தனர். ரஜினி பழங்கால மன்னர் வேடத்தில் குதிரையில் சவாரி செய்வது போன்றும் எதிரிகளுடன் வாள் சண்டை போடுவது போன்றும் நடனம் ஆடுவது போன்றும் காட்சிகள் இருந்தன.
உலகம் முழுவதும் இணைய தளங்களில் கலக்கிய தனுசின் கொல வெறிடி பாடலை முதல் நாளில் ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்களே பார்த்தார்கள். ஒருவாரத்தில் 35 லட்சம் பேர் பார்த்தனர். இரண்டு வருடத்துக்கு பிறகு இந்த எண்ணிக்கை 7.13 கோடியாகியுள்ளது.
விஜய்–அமலாபால் ஜோடியாக நடித்த தலைவா படத்தின் டிரெய்லரை 152 நாட்களில் மொத்தம் 12.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் டிரெய்லரை 115 நாட்களில் 17.2 லட்சம் பேர் பார்த்தனர்.
ஆர்யா நயன்தாராவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற பரபரப்புடன் வெளியான ராஜா ராணி படத்தின் டிரெய்லரை 118 நாட்களில் 8.2 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.
டிரெய்லரை பார்த்த வளசரவாக்கத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் ரமேஷ் கூறும்போது கோச்சடையான்’ டிரெய்லர் உற்சாகம் அளித்தது. அதே நேரம் குறைவான டிரெய்லர் ஓடியது ஏமாற்றம் அளிப்பதாகவும் இருந்தது. ரஜினியை சரியாக காட்டவில்லை.
கண் இமைக்கும் நேரத்தில் காட்சிகள் மறைந்தன. ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்வதாக அமையவில்லை. இதை வைத்து படத்தின் தரத்தை மதிப்பிட முடியாது. அடுத்த டிரெய்லரில் இன்னும் கூடுதல் காட்சிகளை இணைத்து வெளியிட வேண்டும் என்று படத்தின் டைரக்டர் சவுந்தர்யாவை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கோச்சடையான் படத்தில் நாயகியாக தீபிகாபடுகோனே நடித்துள்ளார். அவரது கெட்டப் இன்னும் வெளியிடப்படவில்லை. இரண்டாவது டிரெய்லரில் தீபிகாபடு கோனே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சரத்குமார், ஆதி, ஷோபனா, நாசர் போன்றோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.