வவுனியாவில் மாங்குளத்தில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு!!

333

 
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் காணப்படும் மாங்குளத்தில் பொதுமகன் ஒருவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குளத்துக் காணியில் அத்துமீறி பாதையமைத்ததையடுத்துள்ளமையால் அங்கு சற்று பதற்றமான நிலை காணப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் காணப்படும் மாங்குளத்தில் பொதுமகன் ஒருவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குளத்துக் காணியில் அத்துமீறி பாதையமைத்தமையினையடுத்து கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு தடவைகள் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமான அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொதுமகனால் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு இவ் பாதையினை ஒரு சில வாரங்களில் அப்புறப்படுத்துவதாக பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும் இவ் பாதை அகற்றப்படாததையடுத்து இன்று (19.01.2017) மாலை 3 மணியளவில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து அமைக்கப்பட்ட பாதையினை அப்புறப்படுத்து நடவடிக்கையில் ஈடுபட்ட சமயத்தில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அப்புறப்படுத்துவதை நிறுத்துமாறு தெரிவித்தனர்.

இதனால் அவ்விடத்தில் சற்று பதற்ற நிலை காணப்பட்டது. அதன் பின்னர் செட்டிக்குள பொலிஸாரின் தலையீட்டால் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாக தெரிவித்து சம்பவ இடத்திலிருந்து சென்றார்.

அத்துடன் செட்டிக்குள பிரதேச பிரிவில் காணப்படும் முல்லைக்கல் குளக் காணியிலும் அடாத்தாக பாதை இன்று அமைத்துக் கொண்டிருப்பதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கோரி கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தரால் செட்டிக்குள பொலிசில் 2000ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83வது பிரிவின் கீழ் முறைப்பாடும் இடப்பட்டது.