இலங்கை மீது சைபர் தாக்குதல்கள் நடத்தக் கூடிய அபாயம்!!

529

cyber-attack

இலங்கையின் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இணையத்தின் ஊடாக தகவல்களை கண்காணித்தல், உளவுபார்த்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போதியளவு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசாங்க நிறுவனங்கள் முக்கிய ஸ்தாபனங்களின் இணையத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களை இலகுவில் பார்வையிடக் கூடிய வகையிலான சூழ்நிலையே தற்போது காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு, நிதித்துறை, வெளிவிவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகள் சார் தகவல்கள் உளவு பார்க்கப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்களின் இணையத் தளங்கள். மின்னஞ்சல்கள், சமூக வலைப் பக்கங்கள் போன்றவற்றிற்குள் ஊடுறுவி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினர் அந்நாட்டு மக்களின் தகவல்களை இரகசியமாக உளவு பார்த்த விவகாரம், முன்னாள் சீ.ஐ.ஏ அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டனின் ஊடாக வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தகவல்களை உளவு பார்ப்பதற்கான அதிகளவு வாய்ப்புக்கள் இலங்கையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சுமூகமான உறவுகளை பேணாத நாடுகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.