வடமாகாண சபை முதலாவது அமர்வு ஒக்.15ல் நடைபெறும்!- கைதடியில் வடமாகாண சபைக்கு கட்டிடம்..!

520

northern_mapவட மாகாண சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 15 ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண சபைக்காக முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்ட விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்ட விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களின் நியமனங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுமே ஆளுநருடனான சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு நீடித்திருந்தன.

கொழும்பில் உள்ள மத்திய அரசுடன் ஆலோசித்து முதலமைச்சரின் நியமன கடிதத்தை தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனம் பற்றி கூட்டமைப்பு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் ஓரிரு தினங்களில் அதை தீர்மானிக்க இருப்பதாக சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாண சபைக்கான நிரந்தர கட்டிடம் யாழ். கைதடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் வட மாகாண சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு தற்காலிக கட்டிடத்திலேயே மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் மாகாண சபைக்கான கட்டிடத்தில் தற்போது திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஒக்டோபர் 12ம் திகதி திருத்தவேலைகள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒக்டோபர் 15ம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.