இலங்கைக்கு போர்க் கப்பல் வழங்கப்படுவது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு மேல் நீதிமன்றம் விபரம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்த சட்டத்தரணி பி.ஸ்டாலின் லே நீதிமன்ற கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், இலங்கை அரசுக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவதை கைவிடக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன்.
மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்க தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணி பீட்டர் ரமேஷ்குமார் ஆஜராகி வாதிடுகையில், “தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தால் அந்நாட்டுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இலங்கையை நட்பு நாடாகக் கருதக்கூடாது, பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என தமிழக அரசே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில், இரண்டு போர்க் கப்பல்களை இலங்கைக்கு அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
எனவே, இலங்கைக்கு கப்பல் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்,“ என்றார்.
மத்திய அரசு சார்பில் சட்டத்தரணி ராமச்சந்திரன், தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆகியோர் ஆஜராகினர்.
இலங்கைக்கு போர்க் கப்பல் வழங்கப்படுவது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு மேல் நீதிமன்றம் விபரம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு நகலையும் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு சட்டத்தரணிக்கு நிதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு வரும் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.