
மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்த சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் ஊராட்சி அருகே உள்ள செங்களாக்குடியை சேர்ந்தவர் நாட்டாமை துரைராஜ்.
இவரது மகன்கள் டிரைவர் கார்த்திக்(30), ராஜேஷ் (26). இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, இவரது உறவினரான ராம்குமார் என்பவர் கார்த்திக்கையும், ராஜேசையும் அருகில் உள்ள கோரையாற்றில் வாகனங்களில் மணல் அள்ளுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
கார்த்திக்கும், ராஜேசும் செங்களாக்குடியில் இருந்து கோரையாற்றுக்கு தனி தனி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் 2 பேரும் கோரையாற்றுக்கு அருகில் சென்றதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடந்து சென்றனர். அப்போது கும்பலாக வந்த சிலர் கார்த்திக்கும், ராஜேசையும் தடுத்து நிறுத்தினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் 2 பேரையும் அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த கார்த்திக்கும், ராஜேசும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தனர்.
இவர்களை அழைத்து சென்ற ராம்குமாரும் அந்த கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் 2 பேர் படுகாயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாத்தூர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த பொலிசார் ரத்தம் வடிந்த படி கிடந்த அவர்கள் 2 பேரின் உடலையும் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த கொடுர கொலைகள் முன் விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தீவிர விசாரணையில் போலீசார் இறங்கினர்.
அப்போது பொலிசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட கார்த்திக்கும், ராஜேசும் கோரையாற்றில் இருந்து மணல் அள்ளி வாகனங்களில் கடத்தப்பட்டது குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும், பொலிசாருக்கும் தகவல் தெரிவித்து வந்துள்ளனர்.
இதில் அதே ஊரை சேர்ந்த அவர்களின் உறவினரான கணேசன் என்பவர் மகன் ராஜேந்திரன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது டெம்போவில் மணல் ஏற்றி செல்லும் போது விராலிமலை பொலிசாருக்கு தகவல் தெரிவித்து மாட்டி விட்டுள்ளனர். இதில் ராஜேந்திரனுக்கும், கார்த்திக் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தான் ராஜேந்திரன்(30), ஜெயராம்(26), முத்தழகு(24)ஆகிய 3 பேரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.





