வவுனியா தமிழ் மாமன்றத்தினது நான்காவது விவாதப் பயிலரங்கு இன்று காலை வவுனியா இந்திரன்ஸ் மண்டபத்திலே சிறப்பாக இடம்பெற்றது.
இந்தப் பயிலரங்கிலே வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வ/அல் இக்பால் மகாவித்தியாலயம், வ/ பாவற்குளம் மகாவித்தியாலயம் என்பன பங்குபற்றின. மிகவும் ஆர்வமாக மாணவர்கள் இந்தப் பயிலரங்கிலே பங்கு கொண்டனர்.
மாணவர்களின் பேச்சுத் திறனை வளர்க்கும் பொருட்டு தனிப்பேச்சு, சுழலும் சொற்போர், விவாதம் என்பன நடாத்தப்பட்டன. இன்றைய பயிலரங்கில் பங்குபற்றிய மாணவர்கள் பேச்சுத் திறன்கள் மற்றும் ஆற்றல்கள் என்பனவற்றை மிகவும் நன்றாக வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சி முடிவின் பின் தமிழ் மாமன்றத்தின் மகுட வாசகம் தெரிவு செய்யப்பட்டது. “தமிழால் வையத் தலைமை கொள்வோம்” எனும் மகுட வாசகம் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது.
தமிழ் மாமன்றத்தினது ஏற்பாட்டில் அடுத்த பயிலரங்கு 12-10-2013 அன்றும், அதனைத் தொடர்ந்து ஒரே நாளில் இரு கட்டமாக வவுனியா வடக்கு வலயப் பாடசாலைகளிற்கு 13-10-2013 அன்றும், மேலும் கவிதைக்கான பயிலரங்குகள் 19-10-2013 அன்று அனைத்துப் பாடசாலைகளிற்கும் ஒன்றாக நடார்த்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து தமிழ் மாமன்றத்தின் பணிகள் முன்னேறிக் கொண்டே செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.










