வவுனியா மாவட்ட முதியோர்தின விழிப்புணர்வு செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி வவுனியா பஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 9மணிக்கு நடைபெற்றது.
மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வவுனியா மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான உயர்திரு எம்.கே பந்துல ஹரிச்சந்திர அவர்களும், வவுனியா நகர பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.மு. உதயராசா அவர்களும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் திரு.ஆ.ளு.பத்மநாதன் அவர்களும், வவுனியா வர்த்தக சங்க தலைவர் திரு.இராஜலிங்கம் அவர்களும் நிறுவனத்தின் சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பத்மினி பாலச்சந்திரன் அவர்களும் இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளர் திரு சந்திரன் அவர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முதியோர்களை பாதுகாத்தல் தொடர்பான கருத்துரைகளுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து தனியார் மற்றும் அரச வாகனங்களுக்கு முதியோருக்கான ஆசனங்களை அடையாப்படுத்தியும் முதியோர் தின விழிப்புனர்வை ஏற்படுத்தியும் ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்விழிப்புணர்வு நிகழ்விலே சமூக சேவை உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






