ஆசை நாயகிகளால் சிக்கலில் தவிக்கும் சீன அரசு அதிகாரிகள்..!

461

chineseதாங்கள் அரசின் உயர்ந்த பதவிகளில் இருந்தபோது கிடைத்த பணத்தில் அனுபவித்த ஆசை நாயகிகளின் தொடர்பு இப்போது பல சீன அரசாங்க அதிகாரிகளை சிக்கலில் மாட்டிவிடுகின்றது.

அதிகாரிகளுடன் தாங்கள் அனுபவித்த உல்லாச வாழ்க்கையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக் காட்சிகளையும் வெளியிடுவது தற்போதைய சீன அரசியலில் புதுத்திருப்பமாக உள்ளது. சீன அரசாங்கத்தின் லஞ்ச ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளும் இது போன்ற தொடர்பு வைத்திருப்பவர்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி ஊழலை ஒழிக்க தங்களின் பங்களிப்பைத் தரும்படி அவர்களை ஊக்குவிக்கின்றார்கள்.

ஜி இன்ங்னான் என்ற 26 வயதுப் பெண் தன்னுடன் உல்லாசமாக இருந்த பான் யூ என்ற அரசு அதிகாரியின் புகைப்படங்களை வெளியிட்டது அவரது பணி நீக்கத்திற்கும்,அரசு விசாரணைக்கும் வழி கோலியுள்ளது. இதுமட்டுமின்றி, அந்த அதிகாரியுடன் வர்த்தக வளாகம் ஒன்றில் தான் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதையும்,தனியார் நீச்சல்குளம் ஒன்றில் இருவரும் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்ததையும் வேறு அந்தப் பெண் புகைப்படக்காட்சிகளாக வெளியிட்டுள்ளார்.

அந்த அதிகாரி தனக்கு தினசரி செலவிற்கு 1000டாலர்களும் வெளியில் சென்றுவர ஒரு உல்லாசக் காரும் கொடுத்திருந்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகப் பணிபுரியும் அவர், பான் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என்று நம்பியதாகக் கூறினார். அவர் தன்னை ஏமாற்றியதால் லஞ்ச ஒழிப்புத்துறையையும் அணுகியதாகவும், அங்கும் பலன் கிடைக்காததால் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் எரிசக்தித்துறையில் உயர் அதிகாரியாக இருந்த லியு டினன் வங்கிகளில் 200 மில்லியன் டாலர் ஏமாற்றியது அவரது ஆசைநாயகி வெளியிட்ட புகைப்படங்களால் அம்பலத்துக்கு வந்தது.

மற்றொரு அரசு உயர் அதிகாரியான லி சென்க்பு, தன்னுடைய பணிக்காலத்தில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தது இணையதளத்தில் ஆறு வீடியோத் தொகுப்புகளாக சென்ற வருடம் வெளிவந்தது. இதன் விளைவாக அவர் விசாரணை முடிவில் சிறைத் தணடனையை அனுபவிக்க நேர்ந்தது.