வடமாகாண அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்வை புளொட் ஏன் பகிஷ்கரித்தது?

1310

ploteவடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வை பகிஷ்கரித்தமை தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) விளக்கமளித்துள்ளது.

இவ்விடயம் குறித்து புளொட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நேற்று இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை எமது அமைப்பு தவிர்த்திருந்தது. மேற்படி முடிவானது, மக்கள் மத்தியிலும், எமது அமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியிலும் சில கேள்விகளை எழுப்பியிருக்கக் கூடும். எனவே இது குறித்து, சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.

நாம் ஏன் இத்தகையதொரு முடிவை எடுக்க நேர்ந்தது?

வடமாகாணசபை என்பது, உண்மையில் வடக்கு மக்களுடன் மட்டுமே தொடர்புபட்ட ஒரு விடயமல்ல. இது – ஒட்டுமொத்த தமிழ் மக்களும், இலங்கைத் தீவில் கௌரவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்வதற்கான, ஒரு அரசியல் தீர்வை நோக்கி முன்செல்வதற்கான, ஆரம்ப புள்ளியாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாணசபையை, அவ்வாறானதொரு நோக்கில் கையாள வேண்டும் என்பதுதான், கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகித்துவரும் சர்வதேச சமுகத்தின் எதிர்பார்ப்புமாகும்.

ஆனால் அத்தகையதொரு நோக்கிலிருந்து கூட்டமைப்பு விலகிச் சென்றுவிடுமோ, என்னும் அச்சம் எமக்குள் எழுந்துள்ளது. எமது மக்கள், வடமாகாணசபை தேர்தலின் போது, எமக்களித்த பேராதரவை, வெறும் கட்சி அரசியலுக்குள் முடக்கி, கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தையும் இழந்துவிடக் கூடிய ஆபத்தை, நாம் உணர்கிறோம்.

வடமாகாணசபைக்கான அமைச்சர்கள் மற்றும் ஏனைய பொறுப்புகளுக்கான நியமனங்களின் போது, ஒரு கூட்டு அரசியல் தலைமைத்துவதற்கிற்கான ஜனநாயக பண்புகள் பின்பற்றப்படாமையானது எதிர்காலத்தில் வடமாகாணசபையை, ஒரு அரசியல் தீர்விற்கான தளமாக பயன்படுத்திக் கொள்வதில், பல்தரப்பு உடன்பாட்டை காண முடியாத நிலைமையை தோற்றுவிக்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஜந்து கட்சிகள் இருந்தும், வடமாகாணசபை நிர்வாக முடிவுகளில், ஒரு கட்சி மேலாதிக்கத்தை நிலைநாட்டக் கூடிய ஏது நிலையே காணப்படுகிறது.

ஜந்து கட்சிகளின் பொது உடன்பாட்டின் பேரில், வடமாகாணத்திற்கான முதல்வராக ஏற்றுக்கொள்ளப்பட்ட, திரு.விக்னேஸ்வரன், அந்த உடன்பாட்டிற்கு மாறாக, வெறும் கட்சி மனோபாவ அரசியலுக்குள் முடக்கப்படக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

திரு, விக்னேஸ்வரன், மேற்படி நிலைமைகளை கவனத்தில் கொண்டு, அவற்றை ஆரம்பத்திலேயே நிவர்த்தி செய்யாது விட்டால், வடமாகாணசபையை ஒரு இறுதி அரசியல் தீர்வு நோக்கி முன்கொண்டு செல்வதில் நாம் தோல்வியடைய நேரிடலாம். நாம் தோல்வியடைய வேண்டும் என்பதுதான், அரசாங்கத்தின் விருப்பமும் கூட.

எனவே வடமாகாணசபையில் ஒரு கட்சி மேலாதிக்கத்தை நிறுவ முற்படுவதானது, அதன் இறுதி அர்த்தத்தில், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை இழுத்தடிக்கும் நோக்கில், காரணங்களை தேடியலையும், ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசியல் நிகழ்சி நிரலை வலுப்படுத்துவதில் முடிவுறும்.

இறுதியில் நாம், எமது மக்களுக்களித்த வாக்குறுதிகளை, ஆகக் குறைந்தளவு கூட நிவர்த்தி செய்ய முடியாத கையறு நிலைக்கு தள்ளப்படுவோம்

எனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில், எமக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கிலேயே, எமது அமைப்பு மேற்படி பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்திருந்தது. உரியதை உரிய நேரத்தில், சுட்டிக் காட்டும், மக்கள் நலன்சார் அரசியல் வேலைத்திட்டமாகவே, நாம் மேற்படி பகிஸ்கரிப்பை கருதுகிறோம்.

ஏனெனில் தலைவர்கள் வென்று கொண்டிருப்பதல்ல அரசியல், எங்களை நம்பும் மக்களை வெல்ல வைப்பதே அரசியல். அந்த வகையில், இறுதி அரசியல் தீர்வொன்றுதான், நாம் நேசிக்கும், அந்த மக்களை வெற்றிபெறச் செய்வதற்கான ஒரே வழியாகும். அந்த உயரிய நோக்கில் எமது அமைப்பு தொடர்ந்தும் பணியாற்றும்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் நாம் பங்கேற்காமை எந்த ஒரு சந்தர்ப்பதிலும் வட மாகாண சபையின் வருங்கால செயற்பாடுகளை பாதிக்காது என்பதுடன் வட மாகாண சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு எமது முழுமையான ஆதரவினையும் கொடுப்போம்.