வவுனியா பொலிஸ் நிலையத்தினை அகற்றுமாறு நகரசபை செயலாளர் கோரிக்கை!!

805

வவுனியா நகரமானது வடமாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்கும் முக்கிய கேந்திர நிலையமாக அமைந்துள்ளது. எனவே நகரசபையின் வினைத்திறனான சேவையினை மேலும் மெருகுபடுத்துவதற்கு தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வவுனியா நகரசபைக்கு சொந்தமான காணியினை பெற்றுத்தருமாறு வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வவுனியா நகரசபையின் முகாமைத்துவக்குழு கலந்துரையாடல், நகர அபிவிருத்தி அதிகாரசபை கலந்துரையாடல் என்பவற்றில் ஆராயப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணித்துண்டு நகரசபை அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆதனங்களாக விளங்குவதனால் இவற்றை பொலிஸ் நிலையத்திற்கு வழங்க முடியாத நிலையில் உள்ளது.

எனவே இக் காணியை வவுனியா நகரசபையின் அபிவிருத்திக்காக பெற்றுத்தருமாறு நகரசபை செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச சபை செயலாளர் க.உதயராசாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினாவிய போது,

வவுனியா நகரசபை செயலாளர் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியில் சிறிய துண்டு காணியே நகரசபைக்கு சொந்தமானது.

இக் காணியினை பொலிஸாருக்கே வழங்குமாறு நகரசபை செயலாளரிடம் வேண்டுகொள் விடுத்த சமயத்தில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அக் காணித்துண்டை பொலிஸாரிடமிருந்து மீள பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.