கென்யாவின் மிஸ்.பேபுலஸ் – மாற்றுத் திறனாளிகளுக்கான ஓர் அழகிப்போட்டி..!

449

kenyaகென்யாவில் வித்தியாசமான ஒரு அழகிப் போட்டி நடந்துள்ளது. இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண்களின் உடல் அழகை வைத்தோ அல்லது வனப்பை வைத்தோ பட்டம் தரப்படவில்லை. மாறாக மாற்றுத் திறனாளிகள்தான் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு அசத்தினர். உலகெங்கும் இப்போது தடுக்கி விழுந்தால் அழகிப் போட்டிதான். விதம் விதமான பெண்கள், உலகப் பந்தில் ஏதாவது ஒரு மூலையில் நடந்தபடிதான் உள்ளனர். ஆனால் வழக்கமான அழகிப் போட்டி போல இல்லாமல், வித்தியாசமான ஒரு அழகிப் போட்டியை நைரோபியில் நடத்தியுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான அழகிப் போட்டி இது. குள்ளமானவர்கள், சக்கர நாற்காலியில் நடமாடுவோர், நடப்பதற்கு முடியாதவர்கள் என விதம் விதமான பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
மிஸ் பேபுலஸ் அழகிப் போட்டி என்று இதற்குப் பெயர். இது 4வது ஆண்டாக நைரோபியில் உள்ள 680 ஹோட்டல் என்ற ஹோட்டலில் நடந்தது.

இந்தப் போட்டியில் மிஸ் பேபுலஸ் ஆபிரிக்கா2013 பட்டத்தை சல்லி மைனா என்பவர் தட்டிச் சென்றார். 21வயதான இந்த கென்ய நாட்டு மாடல் அழகி, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்காக பாடுபடப் போவதாக கூறியுள்ளார். 2011ம் ஆண்டுதான் இந்த வித்தியாசமான அழகிப் போட்டி பிறந்தது. அப்போது கென்யாவில் நடந்த மிஸ் கான்பிடன்ஸ் என்ற அழகிப் போட்டியில் ரூத் முயனி என்பவர் பட்டம் வென்றார். இவர் மிகவும் குள்ளமானவர். இந்தப் போட்டிக்குப் பின்னர் அவர் பிரபலமானார்.

இவரது முயற்சியால் உருவானதே இந்த மிஸ் பேபுலஸ் அழகிப் போட்டியாகும். இவர்தான் தன்னைப் போல வித்தியாசமானவர்களாக உள்ள பெண்களை ஊக்குவிப்பதற்காக இந்த அழகிப் போட்டியை நிறுவினார். அதேசமயம், இந்தப் போட்டியில் மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்லாமல் சாதாரண மாடல் அழகிகளும் கூட கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தப் போட்டியை பெரிய அளவில் நடத்த வேண்டும் என்பதே ரூத் முயனியின் ஒரே குறிக்கோளாகும்.