3 இடங்களில் துப்பாக்கிச் சூடு : சிறுவன் உட்பட நால்வர் பலி!!

1107

கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொஸ்கொட – யுதபிடிய, குருதுகம்பியச மற்றும் மெனிக்கிராமம் ஆகிய பகுதிகளிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவத்தில் பலியானவர்களில் 13 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஏனையவர்கள் 21, 38 மற்றும் 50 வயதானவர்களாகும்.

இதேவேளை, இந்த துப்பாக்கிப் பிரயோகத்தால் காயமடைந்த மற்றுமொரு சிறுவன் பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.