வவுனியாவில் எரிபொருள் நிரப்ப சென்றவருக்கு நடந்த விபரீதம்!!

710

 
வவுனியா ஈரட்டை பெரியகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப சென்ற முச்சக்கர வண்டியுடன் சொகுசு கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து, முச்சக்கர வண்டியில் சென்றவர்களுக்கும் காரில் சென்றவர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்துள்ளது.

இச்சம்பவத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளம் பகுதியை சேர்ந்த இர்சாத் (26), சுல்கி (24) ஆகிய இரண்டு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் காயமடைந்தவர்கள், இது சம்பந்தமாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட காரில் பயணித்த இளைஞர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் தாக்குதலை மேற்கொண்ட இளைஞர்கள் வவுனியா நகரில் கந்தசுவாமி கோவில் வீதியில் பயணித்துக் கொண்டிருக்கையில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் நண்பர்களால் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, காரில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பித்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்குள் வாகனத்தை செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவுகள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு முரண்பட்டதால் பொலிஸ் நிலைய பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலையில் காணப்பட்டது.

மேலும் தாக்குதலை மேற்கொண்ட காரில் பயணித்த இளைஞர்கள் மீது வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கார் மற்றும் முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.