ஒரு மாத காலம் வீட்டுக்குள் தடுத்து வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி!!

631

15 வயதான சிறுமியை சுமார் ஒரு மாதம் தனது வீட்டுக்குள் தடுத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருணாகல் – கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர் திருமணமாகதவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 23ஆம் திகதி பகுதி நேர வகுப்புக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை எனவும், தமது பிள்ளை குறித்து தகவல் எதுவும் தெரியாத பெற்றோர் மறுதினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மஹாவ பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைய பெற்றோர் வாரியபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த சிறுமி தான் நலமுடன் இருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

எனினும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சிறுமி கல்கமுவ பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து 21 நாட்களின் பின்னர் வாரியபொல பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 23ஆம் திகதி இருவரும் கண்டிக்கு சென்றதாகவும் இதன் பின்னர் வீட்டுக்கு செல்ல விரும்பாத காரணத்தினால் சந்தேகநபரின் வீட்டுக்கு சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வாரியபொல பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுமியின் தந்தையை விட மூத்தவர் என தெரியவந்துள்ளது.