வவுனியாவில் 3வது நாளாகவும் அரச பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் : வர்த்தகர்கள் கடையடைப்பில்!!

562

வவுனியா பேரூந்து நிலையம் தொடர்பாக வழக்கொன்று நீதிமன்றத்தில் உள்ள நிலையில் வட மாகாண முதலமைச்சரினால் பழைய பேரூந்து நிலையம் நேற்று முன்தினம் (01.01.2018) அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் மூன்றாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் தங்களது வர்த்தகமும் பாதிக்கப்படும் என தெரிவித்து பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130க்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்க விட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வவுனியா பேருந்து நிலைய விவகாரம் தொடர்பில் இ.போ.ச பேருந்துகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பட்சத்தில் பருவச்சீட்டுக்களை பெற்றுள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தனியார் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியுமெனவும், பயணிகளின் நலன் கருதி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை இலவச பேருந்து சேவையை முன்னெடுப்பதாகவும் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ரி.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேரூந்துகள் கடந்த வாரம் முதல் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.