கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தின் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரீதா (28). சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னால் இவருக்கும், சிக்மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (32) என்பவருக்கும் திருமணம் நடந்தது. பி.இ., பட்டதாரியான சந்தோஷ் பசவேஸ்வரா நகரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார்.
பி.டெக் முடித்திருந்த பிரீதாவும் பசவன்குடியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுநிலைப் படிப்பான எம்.டெக்கில் சேர்ந்துள்ளார். கடந்த எட்டு மாதங்களாக எந்தவித சிக்கல்களும் இல்லாமல் சந்தோஷமாக சென்றுவந்த அவர்களின் மணவாழ்க்கையில் பிரீதா நான்காவது செமிஸ்டரில் சேரும்போது பிரச்சினை தோன்றியுள்ளது.
மனைவி தன்னைவிட அதிகம் படித்தவர் என்று உறவினர்கள் கேலி செய்வார்கள் என்று கூறி சந்தோஷ் அவரது மனைவியை படிப்பை நிறுத்தும்படி கூறியுள்ளார். அதற்கு பிரீதா மறுக்கவே இருவருக்குள்ளும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்தோஷ் வீட்டிலிருந்த கடப்பாரையால் மனைவியின் தலையைத் தாக்கியுள்ளார். தலையில் இருந்து வழிந்த ரத்தத்துடன் சரிந்தவரைக் கண்டதும் அவர் இறந்துவிட்டார் என்று பயந்து சந்தோஷ் பதுங்கியபடி வெளியே ஓடியுள்ளார்.
அதனைக் கண்ட அண்டை வீட்டார் ஒருவர் திறந்திருந்த கதவின் வழியே பிரீதா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து காவல்துறையை அழைத்துள்ளார். காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு பிரீதாவை கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால்,சிகிச்சை பலனளிக்காத நிலையில் செவ்வாயன்று இரவு பிரீதா மரணமடைந்தார். திங்களன்று நடு இரவிற்குமேல் வீட்டுக்குவந்த சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் சந்தோஷமாகவே வாழ்க்கையை துவக்கினர். பெங்களூருவில் சந்தோஷ் சொத்து வாங்க முற்பட்டபோது பிரீத்தாவின் பெற்றோர் உதவியை நாடியுள்ளார். தான் படித்து முடித்ததும் வேலைக்கு சென்று உதவுவதாகவும் அப்போது பிரீதா கூறினார் என்று அவரது சகோதரர் பிரதீப்(25) காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். பிரீதாவின் தந்தை கங்காதர் இறந்த தனது மகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.





