வனத்துறை ஜீப்பையே அடித்து நொறுக்கிய காட்டு யானை..!

434

eleகேரள மாநிலம் மூணாறு அடுத்துள்ள மாட்டுப்பட்டி பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. சில யானைகள் கூட்டமாகவும்,சில யானைகள் தனியாகவும் இந்த பகுதியில் உலா வருகின்றன.

மாட்டுப்பட்டி பகுதி சுற்றுலா தலமாக விளங்கி வருவதால் இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

நேற்று மாலையில் மாட்டுப்பட்டி பகுதியில் ஒரு யானை நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் கூச்சல் போட்டுள்ளனர். சிலர் யானை மீது கற்களை எடுத்து எறிந்துள்ளனர். இதனால் யானைக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

உடனே சுற்றுலா பயணிகளை நோக்கி யானை ஓடிவரத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.



அதன்பேரில் அவர்கள் ஒரு ஜீப்பில் வந்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது காட்டு யானை வனத்துறையினரின் ஜீப்பை அடித்து சேதப்படுத்தியது. இதில் ஜீப்பின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அப்போது ஜீப்பில் வனத்துறையினர் யாரும் இல்லை.

இதைப் பார்த்ததும் வனத்துறை அதிகாரிகளும் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினார்கள். மேலும் கோபம் தனியாத காட்டுயானை மாட்டுப்பட்டி அணைப்பகுதியில் உள்ள படகு சவாரி செய்யும் இடத்துக்கு வந்தது.

இதைப்பார்த்ததும் அந்த பகுதிக்குள் யாரும் சென்று விடாமல் போலீசார் பாதுகாப்பு அரணாக நின்று கொண்டனர். படகு குழாமில் இருந்த அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

பின்னர் படகு சவாரியையும் நிறுத்தி விட்டனர். அதேபகுதியில் காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காட்டு யானை கோபத்தில் இருந்ததால் அதை காட்டுக்குள் விரட்ட முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதனால் மாட்டுப்பட்டி அணைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.