ஒரே நாளில் 35 இலட்சம் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட அமெரிக்கா!!

535

USஸ்பெயின் நாட்டின் 6 கோடிக்கும் அதிகமான தொலைபேசி உரையாடல்களை ஒரு மாதகாலத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் ஒட்டு கேட்டுள்ளது. ஒரேநாளில் 35 லட்சம் அழைப்புகளை அதிகபட்சமாக அமெரிக்கா ஒட்டு கேட்டுள்ளது. உலகம் முழுவதும் 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசி, செல்போன் பேச்சுகளை அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் ஒட்டு கேட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதற்கான ஆதாரத்தை, அமெரிக்க உளவுத்துறை முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோடென் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதனால், ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஒட்டுகேட்கும் பட்டியலில் அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் ஒரு மாதத்தில் நடந்த 6 கோடிக்கும் அதிகமான உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான ஆதாரம் வெளியாகி உள்ளது. ஒரேநாளில் 35 லட்சம் அழைப்புகளை அதிகபட்சமாக அமெரிக்கா ஒட்டு கேட்டுள்ளது. எல் முன்டோ என்னும் ஸ்பெயின் பத்திரிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் தஞ்சமடைந்த எட்வர்ட் ஸ்னோடென் உடன் சேர்ந்து கிளன் கீரீன்பில்ட் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார். ஸ்பெயினின் வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஸ்பெயினுக்கான அமெரிக்கத் தூதர் ஜேம்ஸ் கோஸ்டாசை சந்திக்கும் சிலமணி நேரத்திற்கு முன் இத்தகவலை எல் முன்டோ வெளியிட்டுள்ளது. இந்த தகவல் முழுவதும் 2013 ஜனவரி 8ம் திகதி வரையிலான ஒரு மாத தொலைபேசி உரையாடல்கள் உள்ளது.

இதில் தொலைபேசி எண் யாருடையது என்ற முகவரியுடன், அவர்கள் எங்கிருந்து, யாருக்கு, எந்த இடத்திற்கு, எவ்வளவு நேரம் பேசியிருக்கிறார்கள் என்பதும் பேசியவர்களின் முகவரியுடன் விரிவான விபரம் உள்ளது. மிக அதிகபட்சமாக 2012 ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று ஒரே நாளில் மட்டும் 35 லட்சம் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் ஸ்பெயினில் தொலைபேசி ஒட்டுகேட்பது என்பது சட்டப்படி தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்றும் இது ஸ்பெயினின் உள்நாட்டுப் பிரச்சனை என்பதால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடன் கூட்டு நடவடிக்கை எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.