வவுனியாவில் கடன் வழங்கச்சென்ற நுண்நிதி நிறுவன ஊழியர்கள் விரட்டியடிப்பு!!

650

வவுனியா சாந்தசோலை மாதர் சங்கத் தலைவியினால் இன்று காலை கிராமத்திற்குள் சென்ற மூன்று நுண்நிதி கடன் நிறுவனத்தின் ஊழியர்களை அப்பகுதியில் வைத்து கடன் வழங்கும் நடவடிக்கையினை நிறுத்துமாறு கோரி அங்கிருந்து விரட்டியக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சாந்தசோலைப் பகுதியில் வசித்துவரும் இரண்டு குடும்பத்தலைவிகள் நுண்நிதி நிறுவனத்தில் குழுக்கடன்களைப் பெற்றுக்கொண்ட ஏனைய குழுவிலுள்ளவர்கள் பணத்தினைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதன்காரணமாக நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கிழமைக் கடனான 60ஆயிரம் ரூபாவினைச் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், இக்கடன் சுமையிலிருந்து தம்மை மீட்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இன்று காலை சாந்தசோலைப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வைத்து நுண்நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அங்கு சென்ற மாதர் சங்கத்தலைவி சாந்தசோலைப்பகுதியில் வைத்து நுண்நிதி நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்துமாறும் இப்பகுதியிலிருந்து கடன் வழங்குவதும் பணம் வசூலிப்பததையும் நிறுத்திக்கொள்ளுமாறு கோரியுள்ளார். இதைச்சற்றும் எதிர்பார்க்காத நிறுவன ஊழியர்கள் அங்கிருந்து செல்வதற்கு தயக்கம் காட்டியுள்ளனர்.

அப்பகுதியில் இன்று காலை 9.30மணி முதல் பிற்பகல் 1மணிவரையும் மூன்று நுண்நிதி நிறுவனத்திலிருந்து கடன் வழங்கவும் பணம் வசூலிப்பதற்கும் சென்ற நுண்நிதி நிறுவனத்தின் பணியாளர்களை அங்கு செயற்பாடுகளை மேற்கொள்ளவிடாமல் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

அப்பகுதியில் நுண்நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம் பெற்றுக்கொண்ட கடனை அவர்களது நுண்நிதி நிறுவனத்திற்குச் சென்று வழங்குமாறும் இனிவரும் காலங்களில் சாந்தசோலைப்பகுதியில் கடன் வழங்கவோ பணம் வசூலிப்பதற்கோ நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் அனுமதிக்க முடியாது இது தொடர்பாக பிரதேச செயலாளரிடமும் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினரின் கவனத்திற்குக்கொண்டு வருவதாகவும் மாதர் சங்கத்தலைவி தெரிவித்துள்ளார்.

இப்பரபரப்பையடுத்து அங்கு ஒன்றுகூடிய பொதுமக்கள், இளைஞர்கள் நிறுவனத்தின் பணியாளர்களை வெளியேறுமாறு தெரிவித்திருந்தனர்.

இதேவேளை நாளைய தினமும் இரண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் சாந்தசோலைக்கு நுண்நிதி நிறுவனத்தின் கடன்களை வழங்கவும் பணத்தினை வசூலிப்பதற்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.