உயர்தர பரீட்சை முன்னோடி வினாத்தாள் வெளியாகியதால் கல்வியியலாளர்கள், மாணவர்களிடையே அதிருப்தி!!

1057

ALயாழ். கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்துகின்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான வினாப்பத்திரம் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகியுள்ளதால் மாணவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களுக்கு யாழ் . கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பரீட்சைகள் கடந்த 03 ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற மாணவர்களின் பலர் பரீட்சை நிலையத்தினுள் பரீட்சை வினாப்பத்திரத்தையும் அதற்கான விடையினையும் வைத்திருந்துள்ளனர்.

யாழ் . மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலைகளில் எதிர்வரும் 2015ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இவ் வினாப்பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் ஊடாகவே இவ்வினாப்பத்திரம் வெளியாகியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ் வினாப்பத்திரம் வடக்கிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் நிழற்பிரதிகள் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.

தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தின் ஏற்பாட்டில் நீண்டகாலமாக உயர்தர மாணவர்களுக்கு இப் பரீட்சைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இச் சம்பவம் முதற்தடவையாக இடம்பெற்றமையால் கல்வியியலாளர்களின் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இத்தகைய சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருப்பதற்கு வடமாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கல்வியியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.