விடுதலைப் புலிகளை காரணம் காட்டி காலத்தைக் கடத்தாமல் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த கோரிக்கையினை விடுத்தார்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம், வடக்கின் நகரம் மற்றும் நகரை அண்டிய பிரதேசங்களுக்கு மின்சார வசதிகள் கிடைத்துள்ளன. எனினும், வன்னிப் பிராந்தியத்தின் பல கிராமங்களில், இன்னமும் குப்பி விளக்குகள் மூலமே மாணவர்கள் கல்வி கற்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் கூறுகின்ற போது, அதனை குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளாமல், மக்களின் பிரச்சனைகளாக எடுத்து தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறாக அல்லாமல், விடுதலைப் புலிகளைக் காட்டி வாக்குகளை பெறும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருவதாக செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தினார்.
இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் வகையில் உரையாற்றிய மின்சாரத்துறை பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர வடக்கு மக்களுக்கு சேவையாற்றவே வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.





