வடக்கு முதல்வர் ராஜினாமா செய்துவிடுவாரோ என பயப்படுகிறேன் : மனோ கணேசன்!!

606

manoதமிழ் தேசிய கூட்டமைப்பின், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், ஆளுனர் சந்திரசிறியும் 13ம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள். ஆனால்,இன்று இந்த கூட்டு குடித்தனம் நடைபெறவில்லை. அங்கு முரண்பாடு முற்றி விவாகரத்தாகும் நிலைமை உருவாகி வருகிறது.

வடக்கின் மக்கள் ஆணையை பெற்ற முதல்வரும், நிறைவேற்று அதிகாரத்தின் ஆணையை பெற்றுள்ள சந்திரசிறியும் இன்று முரண்பட்டு கொள்கிறார்கள். இந்நிலையை நீடிக்க விடாதீர்கள். நிலைமை மென்மேலும் பாரதூரமடைந்து, இந்நிலவரங்களின் கீழ் பணியாற்ற முடியாது என முதல்வர் தனது பதவியை ஒருவேளை இராஜினாமா செய்து விடுவாரோ என நான் அச்சப்படுகிறேன்.

இது அவரது நிலைப்பாடு அல்ல. இது எனது அச்சம். அப்படியான ஒரு சாத்தியத்தை நான் விரும்பவில்லை. ஆனால், நாட்டில் புதிய நெருக்கடி உருவாகக்கூடாது என விரும்பும் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலான எனது அச்சம் இதுவாகும்.

இதை நாட்டின் ஜனாதிபதியான நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தார்.

மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் உரையாடிய போதே, மனோ இந்த கருத்தை ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அரசியல்ரீதியாக நடைபெற வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.

ஆனால்,தேசிய இனப்பிரச்சினை தீர்வு வரும் வரை மாகாண நிர்வாகம் காத்திருக்க முடியாது. நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தின் கீழ் அவரது பிரதிநிதியான ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் மாகாண நிர்வாகம் தொடர்பிலான நிர்வாக ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.

வட மாகாண நிர்வாகத்தை நடத்தும் செயலாளர்கள் மாற்றப்படுவது உட்பட பல முடிவுகள் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்படுகின்றன. இவை நிர்வாகத்தை குழப்புகின்றன.மாகாண நிர்வாகம் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் எனவும் தொடர்ந்து மனோ கணேசன், மகிந்த ராஜபக்சவிடம் கூறினார்.