இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரிய மனுமீது நேற்று சென்னை மேல்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இதன்படி இந்திய பாதுகாப்பு செயலாளர், வெளியுறவுத்துறை உதவி பணிப்பாளர், இந்திய கரையோர பாதுகாப்பு படை பணிப்பாளர் ஆகியோருக்கு விளக்கம் கோரி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வழக்கு விசாரணையும் ஜனவரி 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் விற்பனை விடயம் குறித்து ஏற்கனவே நீதிமன்றம் இந்திய அமைச்சரவை செயலாளரின் விளக்கத்தை கோரியிருந்தது.
இதனையடுத்து கப்பல் விற்பனையில் மேற்கொள்ளப்படவுள்ள பொறிமுறை குறித்து விளக்கம் பெற்றுக்கொள்வற்காகவே நேற்று உத்தரவுகள் பிறப்பிக்கப்படடுள்ளன.
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டு கப்பல்கள் மூலம் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படும் என்று தெரிவித்து ஸ்டாலின் என்ற சட்டத்தரணி பொதுநல வழக்கை சென்னை மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.





