தொண்டர்களுக்கும் விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் : வடமாகாண சுகாதார அமைச்சர் உறுதி!!

618

Satthiyalingamயாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திடம் வடமாகாண சபை அழுத்தம் கொடுக்கும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உறுதியளித்துள்ளார்.

வடமாகாண சுகாதார அமைச்சுக்கு கீழ் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் சுகாதார தொண்டர்களுக்கும் விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை யாழ்.போதனா வைத்திய சாலையில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சென்ஜோன் அம்புலன்ஸ் மற்றும் சென்சிலுவைச் சங்க பணியாளர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.போதனா வைத்திய சாலையில் பணியாற்றும் தொண்டர்களால் வடமாகாண சுகாதார அமைச்சுக்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை வடமாகாண சபைக்கு உட்பட்ட வைத்திய சாலை இல்லை. இந்த வைத்தியசாலை மத்திய அரசாங்கத்திற்கு கீழ் வருகின்றது.

இதனால் வடமாகா சுகாதார அமைச்சு நேரடியாக இந்த தொண்டர்களுடைய பிரச்சினைகளில் தலையிட சந்தர்ப்பங்கள் இல்லை. இருந்த போதும் இவ்வாறான பிரச்சினை தனியே யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மட்டும் இருக்கின்றது என்று சொல்ல முடியாது.

வடமாகாணத்தில் உள்ள ஏனைய வைத்திய சாலையிலும் இவ்வாறான தொண்டர்களுடைய பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இவ்விடயத்தில் பெரிய பிரச்சினையாக இருப்பது கல்வித்தரம். ஆனாலும் அவர்களுடைய கல்வித்தரம் என்பது இண்டாம் தரப் பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் மிகவும் கஸ்ரமான காலப்பகுதியில் இந்த யாழ்.போதனா வைத்திய சாலையினை இயங்க வைப்பதற்கு இந்த தொண்டர்கள் மிகவும் முக்கயமான பங்கு வகித்துள்ளார்கள்.

இதனால் ஆரம்பத்தில் தொண்டர்கள் உள்வாங்கப்பட்டது போன்று ஆண்டு 8 கல்வித்தரத்துடன், அவர்களை உள்வாங்க வேண்டும் என்பதில் வடமாகாண சுகாதார அமைச்சு மத்திய அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களை கொடுக்கும்.

இவர்களில் மிக நீண்ட காலமாக பணிபுரிந்தவர்கள் இருக்கின்றார்கள். இதனால் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். இதில் மத்திய அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் வடமாகாண சுகாதார அமைச்சு பக்கபலமாக இருக்கும்.

இவ்வாறன ஒரு பிரச்சினையில் அரசியல் தலையீடுகள் வருமாக இருந்தால் அங்கு கட்டாயமாக சீரழிவு வரும். மருத்துவ சேவை என்பது சாதி, சமயம், அரசியலுக்கு அப்பாற்பட்ட சேவை. இதனால் அங்கு வேலை செய்பவர்களும் இவற்றினை மறந்து பணிபுரிய வேண்டிய இடம் இது. அரசியலுக்கு அப்பால் தகுதி உடையவர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும்.

சுகாதாரத் தொண்டர்கள் நியமனம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்..

கடந்த 30 வருடகால யுத்தத்தின் மூலம் எங்களுக்கு தேவையாக எல்லாவகை பணியாளர்களும் தட்டுப்பாடுகளும் இருக்கின்றது. குறிப்பாக வைத்தியர்களைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் தொண்டர் அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார்கள்.

இவ்வாறான தொண்டர்கள் இல்லாது போயிருந்தார் யுத்த காலத்தில் தரமான சுகாதார சேவையினை வழங்கியிருக்க முடியாது. இதனால் தான் கஸ்ர நேரங்களில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு வெளியில் மாகாண சுகாதார அமைச்சுக்கு கீழ்வரும் 99 வைத்திய சாலைகள் உள்ளது. அவற்றிலும் இவ்வாறான தொண்டர்கள் அதிகமாக வேலை செய்கின்றார்கள்.

குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்.மாவட்டத்தில் உள்ள தீவகப் பகுதிகளில் கூட 15 வருடமாக தொண்டர்களாக பணிபுரிபவர்களும் இருக்கின்றார்கள்.

தற்போதைய நிலமையினைப் பார்க்கும் போது மாகாணசபைக்கு கீழ்வரும் 99 வைத்திய சாயைலிலும் ஆளணிக்குரிய வெற்றிடம் இல்லை. ஆனாலும் ஆளனி உருவாக்கப்பட்டது கடந்த 15 வருடத்திற்கு முன்னைய காலப்பகுதிகளில் தான்.

வைத்திய சாலைகளின் தற்போதைய தேவைகள், புதிய வைத்தியசாலைகள், வைத்தியசாலைகளில் புதிய பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, சுகாதார சேவைகளில் அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளது, மக்களுடைய சனத்தொகை அதிகரித்துள்ளது.

இவற்றினை கருத்தில் கொண்டு எங்களுடைய வடமாகாணத்திற்கு தேவையான ஊழியர்களை தொகையினை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மேலதிக தகுதியுடைய தொண்டர்களை உள்வாங்கவேண்டும். சுமார் 700 தொடக்கம் 900 வரையான தொண்டர்கள் வடமாகாணத்தில் உள்ளார்கள்.

எனவே இவர்களுக்கு நியமனம் வழங்குவது என்பது சிறிய பிரச்சினை இல்லை. பாரிய பிரச்சினை. இருப்பினும் அவர்களுக்கு எவ்வளவு விரைவாக அவர்களுக்கு நியமன் வழங்க முடியுமே அந்த வகையில் அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும். அவ்வேலைத்திட்த்தினை வடமாகா சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.