வடக்கில் தனிநாட்டுக்கான நிழல்கள் தென்படுகிறது : சம்பிக்க எதிர்வு கூறல்!!

586

Sambikkaஇலங்கையின் வடக்கில் தனிநாட்டுக்கான நிழல்கள் தென்பட ஆரம்பித்துள்ளதாக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஐக்கிய தேசியக் கட்சி பல்தேசிய சக்திகளின் கைப்பாவையாக மாறியுள்ளது. நாட்டை பிரித்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் அந்த கட்சி ஈடுபட்டுள்ளது.

நாட்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடந்த போது, சிங்களவருக்கும், பௌத்தர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அடிப்படைவாத குழுக்களை இணைத்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி கண்காட்சிகளை நடத்தியது.

இப்படியான கூட்டணிகளை ஏற்படுத்தி வடக்கில் சம்பந்தனின் வாக்குகளையும் கிழக்கின் அடிப்படைவாதிகளின் வாக்குகளையும் மலையகத்தின் அடிப்படைவாதிகளின் வாக்குகளையும் கொழும்பு அடிப்படைவாதிகளின் வாக்குகளை பெற்று சிங்களவர்களை பிளவுப்படுத்தி மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சி கனவு காண்கின்றது. எனினும் அந்த கனவு ஈடேறபோவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே வடக்கில் சிங்களவர்களின் உரிமைகளை மீறி வருகிறது. வடக்கில் தனியான அரசியல் நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்தும் பின்னணியை கட்டியெழுப்பி வருகின்றனர்.

1971 ஆம் ஆண்டு 20 ஆயிரம் சிங்களவர்கள் வாழ்ந்து வந்தனர். இன்று அந்த மக்களை அங்கு மீள்குடியேற விக்னேஸ்வரன் அனுமதிப்பதில்லை. அவர் கொழும்பு பம்பலப்பிட்டியில் வசித்து வருகிறார்.

ஆனால் சிங்களவர்களுக்கு வடக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. சிங்களவர்களுக்கு மத சுதந்திரம் இல்லை. விரும்பிய இடத்தில் குடியேறும் தேசிய சுதந்திரமில்லை. நாட்டை பிளவுப்படுத்துவதற்கு எதிராகவும் நாட்டை காப்பதற்கும், போதைப் பொருள் விற்பனைக்கு எதிராகவும் ஜாதிக ஹெல உறுய தொடர்ந்தும் போராடும் என்றார்.