கிறிஸ்மஸ் என்றாலே இயேசுவின் புகழைப் பாடும் குழுவினருடன் சாண்டா கிளாஸ் உடையணிந்து வரும் நபர் அனைவருக்கும் பரிசுகளையும், இனிப்புகளையும் வழங்குவார் என்பதுவே இதுநாள் வரை நமக்குத் தெரிந்த விஷயமாகும்.
ஆனால் இந்த வருடம் சாண்டாவின் வேடத்தில் வந்த நால்வர் கும்பல் ஒன்று அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் இருந்த வர்த்தக வளாகத்தில் கொள்ளையடித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை சாண்டாகிளாஸ் வேடத்தில் தானியங்கி ஆயுதங்களுடன் வந்த நான்கு திருடர்களும் டிஇஜி என்று அழைக்கப்படும் அந்த வர்த்தக வளாகத்தினுள் நுழைந்துள்ளனர்.
துப்பாக்கி முனையில் கடை உரிமையாளரை அச்சுறுத்திய அவர்கள் அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களையும், நகைகளையும் தங்களின் சாக்குப்பைகளில் நிரப்பிக்கொண்டு தப்பித்துள்ளனர். அவர்கள் தப்பிச்சென்ற கார் 2 கி.மீ தொலைவில் கைவிடப்பட்டிருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
வளாகத்தின் அருகே இருந்த குப்பைத் தொட்டிக்குள் இருந்து இரண்டு துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். திருடர்கள் பயன்படுத்திய பின் அந்த ஆயுதங்களை அங்கு விட்டுச் சென்றிருக்கக்கூடும் என்று அவர்கள் சந்தேகிப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் தகவல் தொடர்பாளரான ஃபுலோரியன் செரியானி தெரிவித்தார்.
இதன் தொடர் நிகழ்ச்சியாக அந்நகருக்கு அருகில் உள்ள கொசோவோவின் தெற்குப் பகுதி நகரமான பிரிஸ்ரெனில் உள்ள நகைக்கடை ஒன்றில் சாண்டா வேடமணிந்திருந்த மூன்று திருடர்கள் நேற்று நுழைந்துள்ளனர்.
கடையிலிருந்த இரண்டு பேரைத் தாக்கிவிட்டு அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பித்துவிட்டதாக டிரானாவின் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.




