நியூயோர்க்கில் அவசரநிலைப் பிரகடனம்!!

563

SNOW

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று முதல் வீசத் தொடங்கியுள்ள பனிப் புயலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்தப் பனிப் புயலினால் பல இடங்களிலும் அதிக குளிர்காற்றும், பனிப்பொழிவும் காணப்பட்டன. மேலும், பல பகுதிகளிலும் சீதோஷ்ணம் மைனஸ் அளவில் இருந்தது.

நியூயோர்க் நகரத்திலும் அதன் வடக்குப் புறநகர்ப் பகுதிகளிலும் குளிர்காலப் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து லாங் தீவிலிருந்து அல்பானி வரை செல்லும் மூன்று முக்கிய நெடுஞ்சாலைகள் நேற்று மூடப்பட்டன.

நகர ஆளுனரான ஆண்ட்ரூ குயோமோ நேற்று நியூயோர்க்கில் அவசரநிலைப் பிரகடனம் செய்துள்ளார். இதன்மூலம் மாநில அளவில் மட்டுமே பயன்படுத்தப்படும் அரசாங்க வளங்கள் விரைந்து நகர மக்களுக்கு உதவி புரியும் வகையில் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை ஆளுனர் நிறுத்தி வைக்கமுடியும்.

இந்த அவசரகால உதவிகளைத் தவிர்த்து மக்கள் பனிப்புயலின் தாக்கம் குறையும்வரை எங்கும் வெளியிடங்களுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நியூயோர்க்கில் உள்ள நான்கு விமான நிலையங்களும் பொதுமக்களின் உபயோகத்திற்காகத் திறந்திருந்தன. ஆனால், நேற்று பிற்பகல் வரை 412 விமான சேவைகள் குறைக்கப்பட்டிருந்தன.

விமான ஒடுதளங்களிலும், விமான நிலையத்திற்கு வரும் பாதைகளிலும் பனி சூழ்ந்து போக்குவரத்து தடைப்படாமல் இருக்க விமான நிலைய ஊழியர்கள் பனி எதிர்ப்பு இரசாயனங்களைத் தூவினர். விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் தங்க நேரிட்ட பயணிகளுக்குத் தேவையான வசதிகளும் விமான நிலையங்களில் செய்து கொடுக்கப்பட்டன.

நியூயோர்க் நகரின் பெருநகரப் போக்குவரத்து ஆணையம் தங்களுடைய ஊழியர்களையும், பயணிகளையும் பாதுகாக்கும் நோக்கில் சில பேருந்துகளையும், ரயில் சேவைகளையும் நிறுத்த இருப்பதாகத் தெரிவித்தது.

அந்நகரின் போக்குவரத்து ஆணையமும், மாநில நெடுஞ்சாலைப் போக்குவரத்தும் மாநிலம் முழுவதும் சாலைகளில் சேரும் பனியை அப்புறப்படுத்தத் தேவையான கருவிகளும், சாலைகளில் போடுவதற்குத் தேவையான உப்பும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.