
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வவுனியா மாவட்டத்தில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வடமாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.ஜி.லலித் ஆனந்த தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் நான்காயிரத்து 140 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைகேடுகளாக 6 முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றன. அவை தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சிறிய முறைப்பாடுகள்.
இருப்பினும் அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுமுகமாக தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




