வவுனியா நகரின் அழகை கெடுக்கும் கட்டாக்காலி மாடுகள் : போக்குவரத்திற்கும் இடையூறு!!

498

கட்டாக்காலி மாடுகள்

வவுனியா நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குலைவதுடன் போக்குவரத்திற்கும் பல்வேறு நெருக்கடிகள் தினசரி ஏற்படுகின்றன.

குறிப்பாக வவுனியா நகரம், வவுனியா – மன்னார் பிரதான வீதி, பட்டனிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் , குருமன்காடு சந்தி போன்ற பகுதிகளில் நடுவீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் பெரும் சிரமம் ஏற்படுவதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு கடந்த காலங்களில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

நாங்கள் தொடர்ந்து கட்டாக்காலி மாடுகள் தொடர்பாக அப்பகுதிக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்த பின்னர் கட்டாக்காலி மாடுகளை பிடித்துக் கொண்டிருந்தோம்.

மழை காரணமாக சிறிது காலம் நாங்கள் இச் செயற்பாட்டை நிறுத்தியிருந்தோம். இதன் காரணமாக மாடுகள் மீண்டும் வீதிக்கு வர ஆரம்பித்துவிட்டது.

கட்டாக்காலி மாடுகள் தொடர்பாக அப்பகுதிக்கு ஒலிபெருக்கி அறிவித்தல் வழங்கி மீண்டும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம்.

அத்துடன் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் சமயத்தில் அதனை உரிமையாளர் உரிமை கோரும் பட்சத்தில் பிடிகாசு என ஒரு மாட்டிற்கு 600 ரூபாவும் அத்துடன் ஒவ்வொரு நாளுக்குமான பராமரிப்பு செலவும் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.