தெற்கு சூடான் கலவரத்தில் 1,000 பேர் பலி!!

561

Sudanதெற்கு சூடான் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியது என ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் கூறியதாவது..

தெற்கு சூடான் முன்னாள் துணை அதிபர் ரீக் மாச்சர் ஆதரவு கிளர்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வளம் மிக்க பென்டியூ நகரத்தின் மீதுதான் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த நகரத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குண்டு வெடித்ததாகவும், மோதல் நேரிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 800-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறி ஐ.நா. முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனவே பென்டியூ நகரத்தில் இன்னும் பலருக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் பகுதியை ஐ.நா. படையினர் விரிவுபடுத்தி உள்ளனர் என்று ஹக் கூறினார். ஐ.நா. அமைதிப்படை தலைவர் ஹெர்வ் லாட்சூஸ் கூறியதாவது:

தெற்கு சூடான் முழுவதும் 60 000க்கும் மேற்பட்டோர் ஐ.நா. முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தெற்கு சூடான் கலவரத்தால் 1 லட்சம் பேர் வரை உகாண்டாவிலும் (கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 32,000 பேர்), 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கென்யா மற்றும் எத்தியோப்பியாவிலும் தஞ்சமடைந்துள்ளனர். மொத்தத்தில் இரண்டரை லட்சம் பேருக்கு மேல் புலம் பெயர்ந்து விட்டனர்.

கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவில்லை. எனினும், டிசம்பர் 15ஆம் திகதி கலவரம் மூண்டதில் இருந்து இதுவரை 1000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு சூடானுக்கு மேலும் 5500 வீரர்களை அனுப்ப ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. கூடுதலாக 850 வீரர்களை நேபாள அரசு அனுப்புகிறது.

ஐ.நா. அமைதிப்படை, தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர் அரசுக்கோ, கிளர்ச்சிப்படை தலைவர் ரீக் மாச்சர் தரப்புக்கோ சாதகமாகச் செயல்படாது என்று லாட்சூஸ் கூறினார்.