
இந்தோனேஷியாவில் உள்ள The Surabaya Zoo என்ற மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்று மர்மமான முறையில் தூக்கில் தொங்குவதை பார்த்து மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
18 மாதமே ஆன மைக்கல் என்ற சிங்கம் நேற்று காலையில் தூக்கில் தொங்கியபடி அதன் கூண்டில் இருந்தது.
சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டு பூட்டியிருக்கும்போது எப்படி சிங்கம் தூக்கில் தொங்கியது என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. மிருகக்காட்சி சாலையின் ஊழியர்களின் வேலைதான் இது என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இந்த மிருகக்காட்சி சாலையில் இதுவரை சுமார் 40 மிருகங்கள் வரை இறந்துள்ளன.
சென்ற ஜூலை மாதம் ஒட்டகம் ஒன்று திடீரென இறந்தது. அதன் வயிற்றில் 20 கிலோ பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் இருந்ததுதான் மரணத்திற்கு காரணம் என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோலவே ஒரு புலியும் மர்மமான முறையில் சென்ற ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மிருக்ககாட்சி சாலையின் ஊழியர்கள் மிருகங்களை சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. சரியான நேரத்திற்கு உணவிடுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் மிருகக்காட்சி சாலைக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை என அதிகாரிகளும் தங்கள் மனக்குறையை தெரிவித்துள்ளனர்.




