வவுனியா வீரபுரம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை : மக்கள் 2வது தடவையாகவும் போ ராட்டம்!!

653

ஆசிரியர் பற்றாக்குறை..

வவுனியா, வீரபுரம் மாணிக்கவாசகர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர்களும், மாணவர்களும் இன்று காலை இரண்டாவது தடவையாகவும் பிரதான வீதியில் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையில் கணக்கீடு, வர்த்தகம், இந்துநாகரீகம், கணிதம், தமிழ் மற்றும் கலை பாடங்களான சித்திரம், சங்கீதம் இரண்டாம் மொழி பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

இங்கு 342 மாணவர்கள் கல்விகற்கும் நிலையில் 20 ஆசிரியர்களும் பகுதி நேரமாக இரண்டு ஆசிரியர்களுமே கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக ஆரம்பப் பிரிவில் 105 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 3 ஆசிரியர்களே கல்வி கற்பித்து கொண்டிருக்கின்றனர்.

இப்பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மற்றும் உயர்தர மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இன்றி இப்பாடசாலை இயங்கி வருகின்றது.

பாடசாலை முன்பாக செட்டிகுளம், நேரியகுளம் வீதியில் மாணவர்களும், பெற்றோர்களும், பழைய மாணவர்களும் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆ ர்ப்பாட்டக்காரர்கள் கிராமத்திற்கு ஒரு நீதி நகரத்திற்கு ஒரு நீதியா?, எமது பாடசாலை எமக்கு வேண்டும் ஆசிரியர்களை உடன் நியமி, கிராமத்தின் கல்வி வளம் கல்வியே, சமமான கல்வியை வழங்கு,

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், கிராமப்புற பாடசாலைகளுக்கும் உங்கள் கண்களை திருப்புங்கள், மாணவர்களின் கல்வியை நாசமாக்காதீர் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

இதன்போது, செட்டிகுளம் கோட்ட கல்விப் பணிப்பாளருக்கு பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக எடுத்துக்கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே தாம் இவ் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் கோட்டக்கல்வி அதிகாரி, செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் ஆ ர்ப்பாட்டக்காரருடன் கலந்துரையாடினர்.

இதன்போது தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்குள் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து போ ராட்டம் கைவிடப்பட்டது.