ஐக்கிய மக்கள் சக்தி

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (19.03.2020) வேட்பு மனுவினை ரிசாட் பதியுதீன் தலைமையில் தாக்கல் செய்திருந்தது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வன்னிக்கான முதன்மை வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தலைமையில் வவுனியா மாவட்டசெயலகத்திற்கு வருகை தந்திருந்த வேட்பாளர்களான யுனைஸ் பாருக், ம.தயாநந்தன், த.பகீரதன், ம.குரூஷ், அன்ரனி றொகான், க.செய்யுதீன், பு.கருணதாஷ, ரூபசிங்க ரசிக்கா பிரியதர்சினி ஆகியோர் வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த ரிசாட் பதியுதீன், மக்களுக்காக சேவையாற்றவே நாங்கள் ஐக்கியமாக தேர்தலில் போட்டியிடுகிறோம்.

எமது அனியிலே இரண்டு முஸ்லிம்கள், இரண்டு சிங்களவர், நான்கு தமிழர்கள் போட்டியிடுகின்றனர். அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் தனித்து எமது கட்சி போட்டியிடுகின்றது.

ஏனைய மாவட்டங்களில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறோம். வன்னியை பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுகின்றோம் என்று தெரிவித்தார்.







