என் இரத்தத்தில் பதில் இருக்கலாம் : கொரோனா பாதித்தவர்களுக்கு உதவிய இளம்பெண் : ஆச்சரிய தகவல்கள்!!

609

இளம்பெண்..

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இளம்பெண் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தனது இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பல நாடுகள் கொரோனா பிடியில் சிக்கிதவிக்கும் நிலையில் அமெரிக்காவும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நியூயோர்க் நகரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த நகரத்தைச் சேர்ந்த டிஃப்பனி பிங்க்னி என்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர். இவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தன் இரத்தத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.

அமெரிக்காவிலேயே முதல் முறையாக டிஃப்பனி இதைச் செய்துள்ளார். கொரோனா வைரஸுக்கான பதில்கள் ஒருவேளை என் இரத்தத்தில் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களுக்கு உதவிய நோய் எதிர்ப்பு மூலக்கூறுகளுடன் அவர்களின் இரத்த பிளாஸ்மாவை வேறு ஒருவருக்குச் செலுத்தினால் அவரும் குணமடையலாம் என நம்பப்படுகிறது.

இது பற்றிப் பேசிய மவுண்ட் சினாய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் டேவிட் ரீச், டிஃப்பனியின் செயல் வரவேற்கத்தக்கது. அவர் முற்றிலும் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டதும் அனைத்துச் சோதனைகளும் செய்யப்பட்ட பிறகே இரத்த தானம் செய்தார். எங்களின் இந்த முயற்சி நல்லபடியாகச் செயல்படும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ளார்.

ஒரு நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவரின் உடலில் தானாகவே அந்த நோயை எதிர்க்கக் கூடிய ஆன்டிபாடிகள் உருவாகும். இந்த ஆன்டிபாடிகள் உயிர் பிழைத்தவரின் ரத்தத்தில் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்குக் கூட அப்படியே இருக்கும். இதை வைத்தே தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.