கொரோனாவால் இத்தாலியில் 100 மருத்துவர்கள் உயிரிழப்பு!!

545

இத்தாலியில்..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அல் ஜெசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த பெப்ரவரி மாதம் இத்தாலியில் பரவ ஆரம்பித்தது. அன்று முதல் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு மருத்துவர்களின் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கொவிட் 19 காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 100, துரதிஷ்டவசமாக அந்த எண்ணிக்கை 101 ஆகவும் அதிகரிக்கலாம்” என இத்தாலி மருத்துவர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் 94 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் கடந்த 7 ஆம் திகதி அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மூன்று தினங்களுக்குள் 6 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் 26 தாதியர்கள் உயிரிந்துள்ளதாக அந்நாட்டு தாதியர் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

அத்துடன் 6 ஆயிரத்து 549 தாதியருக்கு கொரோனா தொற்றியுள்ளது. கடந்த 6 ஆம் திகதி வரை இத்தாலியில் சுகாதார சேவையில் ஈடுபடடுள்ள 12 ஆயிரத்து 681 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

முக கவனம், கை கவனம், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள் போன்ற மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது மருத்துவர்கள், தாதியர், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்ற பிரதான காரணமாக அமைந்துள்ளதாக இத்தாலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.