வவுனியாவில் பல திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் இளைஞர்களினால் மடக்கிப்பிடிப்பு!!

689

திருட்டு..

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரை இளைஞர்கள் மடக்கிப்பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இன்று (24.07.2020) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு சமயத்தில் வீடு புகுந்து தொலைபேசிகள், இலத்திரனிய உபகரணங்கள் போன்றன திருடப்பட்டிருந்தன.

இவ்விடயம் தொடர்பில் நெடுங்கேனி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்படிருந்தன. இந் நிலையில் குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்றையதினம் வவுனியா நகரில் உள்ள தொலைபேசி விற்பனையகத்திற்கு சென்று களவாடிய தொலைபேசியினை மிகமிகக் குறைந்த விலைக்கு விற்க முற்பட்ட சமயத்தில்,

குறித்த வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தினர். இதன் போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த பொருட்கள் நெடுங்கேணிபகுதியில் களவாடப்பட்ட பொருட்கள் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரின் பயணப்பொதியினை சோதனையிட்ட போது அதனுள் களவாடப்பட்ட தொலைபேசிகள் , இலத்திரனியல் உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றினர்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருவதினால் குறித்த நகரையும் களவாடப்பட்ட உபகரணங்களையும் வவுனியா பொலிஸார் நெடுங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த திருட்டு சம்பவத்துடன் இராஜகிரிய பகுதியினை சேர்ந்த 43வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.