கொரோனா..

சிலாபம் – பங்கதெனிய பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தினுஷா பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29 வயதான கர்ப்பிணிப் பெண் முல்லேரியா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் துபாயில் இருந்து இலங்கைக்கு வந்த அந்தப் பெண், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த பின்னர் தனது வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

எனினும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று இரவு வரை 2986 ஆக உயர்ந்திருந்தது. இன்று இரண்டு பேர் தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





