நான் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசினால் கேரளா தாங்காது என்று சரிதா நாயர் கூறியுள்ளார். கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் ஓயவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சரிதா நாயர் சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த அவர், தன்னை கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி சில மாதங்களுக்கு முன் ஹோட்டலுக்கு உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்தார் என்று புதிய குற்றச்சாட்டை கூறினார்.
இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அப்துல்லா குட்டியை ராஜினாமா செய்யும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் திருவனந்தபுரம் பொலிஸ் நிலையத்தில் சரிதா நாயர் நேற்று புகார் கொடுத்தார். அதில், அப்துல்லா குட்டி தன்னை ஹோட்டலுக்கு வருமாறு அழைத்தது பற்றி கூறியதால் அவருடைய ஆதரவாளர்கள் போனில் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் சரிதா நாயர் அளித்த பேட்டியில், நான் யாரையும் பழி வாங்க முயற்சிக்கவில்லை. அப்துல்லா குட்டிக்கும், எனக்கும் எந்த முன்விரோதம் கிடையாது. அவர் என்னை துன்புறுத்தியதால்தான் புகார் கூறினேன். நான் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை.
மேலும் நான் எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறினால் கேரளா தாங்காது. பலருடைய குடும்பங்கள் சின்னா பின்னமாகிவிடும்.
ஆனால், படிப்படியாக நான் சில தகவல்களை வெளியிடுவேன். நான் யாரையும் பிளாக்மெயில் செய்ய விரும்பவில்லை. பலரிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் இதனால் என்னை துன்புறுத்தியவர்களை விட மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
இவருடைய இந்த பேட்டியால் கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல முக்கிய அரசியல் தலைவர்கள் பற்றிய உண்மைகள் இவரிடம் புதைந்து கிடப்பதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது.




