அரச ஊழியர்கள்..

நாட்டில் காணப்படும் கோவிட் -19 தொற்று நோய் நிலைமையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது நாளைய தினம் முதல் குறைக்கப்படலாம் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இன்று அல்லது நாளை இறுதி தீர்மானம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னரும் கோவிட் பரவல் காரணமாக அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பது குறைக்கப்பட்டிருந்தது.

தொற்று நோய் நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், அனைத்து அரச ஊழியர்களும் கடந்த மார்ச் 8 ஆம் திகதி , ஒரு வருட காலத்திற்குப் பின்னர் அலுவலகங்களுக்கு சமூகமளித்தனர்.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவும் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் கோரிக்கைகளை விடுத்திருந்தார்.

அதேநேரம் அடுத்த இரண்டு வாரக்காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் துறையின் அனைத்து நிகழ்வுகளும் ரத்துசெய்யப்படவேண்டும் என்று நேற்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்தல் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-தமிழ்வின்-





