வவுனியா உக்குளாங்குளத்தில் 3 ஆவது டெங்கு நோயாளரும் அடையாளம் : தொற்றாளர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!!

488

டெங்கு..

வவுனியா, உக்குளாங்குளம் கிராமத்தில் 3 ஆவது டெங்கு நோயாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்திலும் ஏற்கனவே கடந்த மாதம் 7 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டனர். மேலும் ஒருவர் இம்மாதம் முதலாம் வாரத்திலேயே டெங்கு நோயாளராக இனங்காணப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் இதுவரை 8 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 3 பேர் உக்குளாங்குளம் கிராமத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது அடையாளம் காணப்பட்ட இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற போதும் இதுவரை குறித்த இளைஞனின் வீட்டிற்கு சென்று சுகாதார பரிசோதகர்கள் டெங்கு பரவும் அபாயம் உள்ளதா என்பது தொடர்பில் அவதானிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.